நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் 40% மாணவர்களே வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் நீட்டில் தோல்வியடைந்த விழுப்புரம் மாணவி பிரதீபா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவ்விவகாரம் இன்று சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், நீட் தேர்வில் தோல்வியால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவது குறித்தும், நீட் தேர்வுக்கு விலக்கு தமிழகத்துக்கு அளித்து நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் நிலை என்னவெனவும் கேள்வியெழுப்பினார். இதே கேள்வியை காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , நீட் தேர்வு தோல்விக்காக மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. கடந்த ஆண்டு 155 மதிப்பெண்கள் பெற்ற இவர் சித்த மருத்துவம் படிக்க இடம் கிடைத்து படித்து வருகிறார். இந்நிலையில் எம்.பி.பி.எஸ் படிக்க இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி 35 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் இந்த அரசும் கொண்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த விலக்குக்கு தடை வாங்கினார். மீண்டும் இந்த அரசு விலக்கை பெறும் முயற்சியை தொடர்ந்து வருவதாகவும் கூறிய அவர், நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது எனவும், திமுக அதனுடன் கூட்டணி வைத்தது எனவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின் 2006 முதல் 2011 வரை தாங்கள் ஆட்சியிலிருந்த போது நீட் அமல்படுத்தவில்லை எனக் கூறியதுடன் மசோதாவின் நிலை என்னவென கேட்டார்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியின் நளினி சிதம்பரம் தான் விலக்குக்கு தடை உத்தரவு வாங்கினார் எனக் கூறினார்.
இதனையடுத்து அமைச்சரின் பதில் திருப்தியில்லை எனக்கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.