- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
June 4, 2018 at 4:14 pm #3345
கமல்ஹாசனின் கருத்துக்கு ,எதிர்ப்பு தெரிவித்து ரஜினிக்கு ஆதரவாக தமிழருவி மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
திரு.கமலஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமலஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.
ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம். இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றிருந்த நிலையில் ஒத்துழையாமை, சாத்விக சட்ட மறுப்பு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, தேசியக் கல்வி போன்ற தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் காந்தி மக்கள் கருத்தை மாற்ற முயன்றார். அடங்கிக் கிடப்பதுதான் ஆண்டவன் எழுதி வைத்த விதி என்ற நம்பிக்கையில் ஒடுங்கிக் கிடந்த அடித்தட்டு மக்களிடம் தன் உரிமை சார்ந்த சொந்தக் கருத்துகளின் மூலம்தான் புரட்சிக் கனலை அண்ணல் அம்பேத்கார் மூட்டினார். தன்மான உணர்வின்றித் தலை தாழ்ந்து கிடந்த தமிழரிடையே பகுத்தறிவு சார்ந்த தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் “அறிவும் மானமுமே மனிதற்கு அழகு” என்று பெரியார் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார். ரஜினிகாந்த் காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை.
காந்தியின் சீடர் என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார். கிராமக் கைத்தொழில்களும், சிறு குறு தொழில்களும், வேளாண்மையும் பல்கிப் பெருகுவதன் மூலமே அனைத்து மக்களும் வறுமையற்ற வாழ்வை அடைய முடியும் என்று இடையறாமல் வலியுறுத்திய காந்தி பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார். கமலஹாசன் இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது. சமூக வலைத்தளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது என கூறப்பட்டுள்ளது.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.