தூத்துக்குடி சம்வத்தில் யார் யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை உறுதி- முதல்

Forums Communities Fishermen தூத்துக்குடி சம்வத்தில் யார் யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை உறுதி- முதல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3341

  தூத்துக்குடி சம்வத்தில் யார் யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை உறுதி- முதல்வர்

  தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை யாரையும் கைது செய்யவில்லை என்றும், யார் யார் என்னென்ன தவறு செய்தார்களோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

  சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி ரூ.1 கோாடி வழங்க வேண்டும் என்றும், ஆலையை மூட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயங்குவது ஏன் ? ’ என்றும் மு.க.ஸ்டாலின்  கேள்வி எழுப்பினார்.

  இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

  எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சொல்லுகிறார். இப்போது நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டு விட்டது. ஆலை திறக்க முடியாது. 1974-ம் ஆண்டு நீர், மாசு தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 18 (1)-ன் படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆலைக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தால், அதன்பிறகு, தமிழ்நாடு அரசு அதிலிருந்து மாறுபட்டு வேறு ஏதேனும் உத்தரவு வெளியிட்டால் தான், தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.

  ஆனால் இன்றைய தேதியில், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஆலையை நிரந்தரமாக மூடுவற்கு வெளியிட்ட அரசாணை, மேற்கண்ட சட்டப்படி செல்லும் என்பதை இந்த அவையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக, சட்ட வல்லுநர்கள், அரசு வழக்கறிஞர்கள், மூத்த அமைச்சர்களோடு கலந்து பேசி, இந்த ஆலை நிரந்தரமாக மூட வேண்டும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே, இந்த உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை  எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  அதுமட்டுமல்ல, அந்த ஆலைக்கு என்னென்ன அனுமதி கொடுத்தார்களோ, அந்த அனுமதி எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதேபோல, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. பாய்லர் லைசன்ஸ், அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டது. விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் கொடுக்கப்பட்டது. அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆகவே, இன்றைக்கு ஆலை இயங்காத அளவிற்கு அனைத்து வகையிலும் அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்பதை தங்கள் வாயிலாக  எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  எதிர்க்கட்சித் தலைவர்  இன்றும் பலபேரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள் என்று சொன்னார். நான் ஏற்கெனவே குறிப்பிட்டு இருக்கின்றேன், விஷமிகள், சமூக விரோதிகள் இவர்களின் புகைப்படங்களை எல்லாம் அன்றைக்கே காட்டினேன். யார் யாரெல்லாம் உருட்டுக்கட்டை வைத்துக் கொண்டு அடித்தார்கள், அதுபோல யார் யாரெல்லாம் பெட்ரோல் குண்டு வைத்து கார்களுக்கு தீ வைத்தார்கள். அந்த புகைப்படங்களும், ஊடகத்தில் வந்துள்ளது.

  ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும், பொதுமக்கள் தங்களுடைய உரிமைக்கு போராடுவதிலே எந்தவித தடையும் கிடையாது.  அரசை பொறுத்தவரைக்கும், பல்லாயிரக்கணக்கான போராட்டம் தமிழகத்திலே நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான்.

  அந்த அளவிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு உரிமையை நிலைநாட்ட போராடுகின்றவர்கள், உண்மையிலே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அரசிடம் உரிமை பெற வேண்டும் என்று போராடியவர்கள் எல்லாம், தகுந்த பாதுகாப்போடு தக்க அனுமதி கொடுத்து இருக்கின்றது.

  இன்றைக்கு பல்வேறு கட்சிகள் போராடுகின்றனர். எதிர்க்கட்சிகளும் போராடுகின்றனர். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியாக இருந்த போது போராடியது, ஊர்வலம் நடத்தியது. அப்போது எங்காவது உருட்டுக்கட்டை எடுத்துக் கொண்டு சென்றோமா? பெட்ரோல் குண்டு எடுத்துக் கொண்டு சென்றோமா? என்பதை எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் நினைத்து பார்க்க வேண்டும்.

  எவ்வளவு புகைப்படங்கள் இருக்கின்றது. வேண்டும் என்றால் காண்பிக்கின்றேன். காரை உடைத்து பெட்ரோல் குண்டை உள்ளே போடுகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களா? அதேபோல, உருட்டுக்கட்டை எடுத்துக் கொண்டு அடிக்கின்றார்கள். பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கின்றார்கள். அவர்கள் பொதுமக்களா? ஆகவே, சில விஷமிகளும், அங்கே சமூக விரோதிகளும் இருக்கின்றனர். இவர்களை தான் நாங்கள் சமூக விரோதிகளாக சித்தரிக்கிறோமே தவிர, பொதுமக்களை அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

  இப்படி, வன்முறையாளர்களையும், சமூக விரோதிகளையும், விஷமிகளையும் எந்த அரசும் ஊக்கப்படுத்தக் கூடாது. ஏனென்றால், அது பிற்காலத்திலே ஒரு மிகப் பெரிய சோதனையை உட்படுத்திவிடும். ஆகவே தான், அதில் ஈடுபட்டவர்கள், தீ வைத்தவர்கள், உருட்டுக்கட்டைகளை  வைத்து காரை இடித்தாலும் சரி, அது தவறுதான்.

  ஆகவே, வன்முறையில் ஈடுபட்டவர்களை தான் காவல்துறையினர் கைது செய்துள்ளார்களே தவிர, பொதுமக்களை அல்ல என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு தக்க ஆதாரங்கள் இருந்தால் தான் கைது செய்கிறார்கள். உடனடியாக யாரையும் போய் கைது செய்யவில்லை. அதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால், அப்படி வன்முறையில் ஈடுபட்டவர்கள், விஷமிகள், ஆதாரத்துடன் தான் கைது செய்யப்படுகின்றனர் என்பதையும் தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துக் கொள்கிறேன்.

  போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை யாரையும் கைது செய்யவில்லை. அதற்கு அரசும் அனுமதிக்காது. அதுமட்டுமல்லாமல், இப்போது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலே விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விட்டது. ஸ்டெர்லைட் பிரச்சனை சம்பந்தமாக தூத்துக்குடியில்  நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விவரங்களை தாராளமாக அவர்களிடத்திலே அளிக்கலாம். தகுந்த ஆதாரங்களுடன் அளித்தால், யார் தவறு செய்தாலும், உரிய நடவடிக்கை அரசு எடுக்கும் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

  அதுமட்டுமல்லாமல், அந்த நீதி விசாரணை முடிந்த பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் அடிப்படையிலே, யார் யார் என்னென்ன தவறு செய்தார்களோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்துக் கொள்கிறேன்.

  அரசு உரிய முறையிலே மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும். அதுமட்டுமல்லாமல், நடைபெற்ற சம்பவங்கள் உரிய முறையிலே விசாரிக்கப்பட்டு, அந்த நீதி விசாரணையின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடனே உரிய முறையிலே அரசு நடவடிக்கை எடுக்கும்.

  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

   

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This