தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- தமிழக அரசின் ஒரு நபர் கமிஷன் விசாரணை தொடங்கியது
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமிஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
விசாரணைக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர் கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர் முறைப்படி விசாரணையை தொடங்கினார். அவர் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிடுகிறார். பின்பு அவர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களிடமும் விசாரணை நடத்த இருக்கிறார். . இதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் துப்பாக்கி சூடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறுகிறார்.