குமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென் பகுதிகளை உள்ளடக்கிய பழைய தென் திருவிதாங்கூர் பகுதிகளில் பொதுவாகவே ஏப்ரல், மேய் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாகவே இருக்கும்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இக்கடல்பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் பெரிய அளவில் கடலரிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், குளச்சல் மீன்பிடி துறைமுகம், குறும்பனை தூண்டில் வளைவு போன்றவற்றின் வருகைக்கு பின்னர், மிடாலம், மேல்மிடாலம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடலரிப்பு கணிசமாக ஏற்பட்டுள்ளது.
இது போன்றே, தேங்காய்பட்டணம் மீன் பிடித் துறைமுகம் வருகைக்கு பின்னர், முள்ளூர்துறை, பூத்துறை, தூத்தூர்,இடப்பாடு உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடலரிப்பு கணிசமாக ஏற்படக் காரணம் என்கிறார் விழிஞ்ஞத்தை சேர்ந்த கடல் சார் ஆராய்ச்சியாளர் விஜயன்.
இது போன்றே விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தால் தான், திருவனந்தபுரம் மாவட்டத்தின், சங்குத்துறை, வலியதுறைகளும், ஆலப்புழா மாவட்டத்தின் சில இடங்களிலும் பெரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதாக கூறுகிறார் அவர்.
இது எவ்வாறு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு, கடலின் இயல்பான நீரோட்டத்தில் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் தடை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒருபுறம், விரிந்த கடற்பரப்பும், மறுபுறம் கடல் அரிப்பும் ஏற்படுவதாக கூறுகிறார்.
– விஜயன் – ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் நிதியுதவியுடன் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தவர். கூடவே தூத்தூர், பொன்னானி கடலோர கிராமங்கள் குறித்த ஆராய்ச்சிக்குழுவில் இடம் பெற்றவர்.