தூத்துக்குடி சம்பவத்துக்கு உளவுத்துறையை காரணம் என நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடிக்கு இன்று சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், அவர்களின் குடும்பதினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதில் முதற்கட்டமாக 9 பேருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘‘மக்களின் அமைதியான போராட்டத்தின் போது, சமூக விரோதிகளால் வன்முறை வெடித்தது. இதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெயலலிதா அதனை சரியாக செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கக் கூடாது. தமிழகம் போராட்டக் களமாக மாறிருக்கிறது. தூத்துக்குடியில் நடந்த அசம்பாவிதத்துக்கு உளவுத்துறையின் தவறே காரணம்’’ என்றார்.