கர்நாடக கடற்பகுதியில் காணாமல் போன குமரி மீனவர்களை கடலோரப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் செபஸ்தியான் (வயது 41), ஜெகதாஸ் (30), சிஜன் (25), புஷ்பராஜ் (46), அருள்ராஜ் (25) ஆகிய 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மீனவர் ததேயுஸ் (50) என மொத்தம் 6 பேர் கடந்த 14-ந் தேதி தேங்காப்பட்டணத்தில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் கர்நாடக மாநில கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலைகள் அவர்களது படகை கவிழ்த்தது. இதனால் மீனவர்கள் 6 பேரும் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் படகு கவிழ்ந்த பகுதி அருகே குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில் வந்தனர். அவர்கள், கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களில் செபஸ்தியான், ஜெகதாஸ், சிஜன், ததேயுஸ் ஆகிய 4 பேரை மீட்டனர். மற்ற 2 பேர் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் அப்பகுதிக்கு சென்று மூழ்கிய மீனவர்கள் புஷ்பராஜ், அருள்ராஜ் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்களுடைய கதி என்ன? என்பது தெரியவில்லை.
இருப்பினும் கடலோர காவல்படையினருடன், மீனவர்களும் இணைந்து மூழ்கிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கர்நாடக கடல் பகுதியில் கவிழ்ந்தது குறித்தும், கடலில் மூழ்கிய புஷ்பராஜ், அருள்ராஜ் ஆகிய 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவது குறித்தும் தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின் தெரிவித்தார்