Forums › Communities › Fishermen › ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு
Tagged: sterlite
- This topic has 4 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
May 28, 2018 at 6:35 pm #3029
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கேட்டு நடந்த போராட்டத்தின் வெற்றி முகமாக, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று மாலை ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று ஆலை செயல்படாமலிருக்க சீல் வைத்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறை ஆய்வாளர் தெரிவிக்கிறார்
May 28, 2018 at 8:26 pm #3031தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் நாள்தோறும் ஒரு மணிநேரம் போராட்டம் நடக்கும் என மக்கள் அறிவிப்பு; ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என குமரெட்டியாபுரம் மக்கள் கோரிக்கை #Tuticorin #Sterlite
May 28, 2018 at 8:34 pm #3032முகநூலிலிருந்து
Saravanan Savadamuthu
1 hr ·
ஒரே நாளில் மூடி விட்டதாய் யாரை ஏமாற்றுகிறீர்..? முற்று முழுதாய் மூட ஆறு மாதம் ஆகும்.. ஆனால் ஆலை இயங்காமல் இருக்கச் செய்யலாம்!ஆலையை மூட வேண்டுமெனில் கீழ்க்காணும் அனைத்து ஒப்புதல் ஆவணங்களும் தேவை…..
Inspector & Director of factories
TNPCB(Tamilnadu pollution control board)
CPCB (Central pollution control board)
GT (Green tribunal)
Inspector &Director -Hygiene
Explosive controls – Nagpur
SIPCOT project Director
TNEB (TANGETCO)
District Revenue commissioner
District collector
District police
District MLA
TN Minister of Industry
இன்னும் உள்ளது.
எனினும், இதில் மிக முக்கியமானது TNPCB ஒரு அறிக்கையை TNEB க்கு தக்க காரணங்களுடன் கொடுக்க வேண்டும். அதனுடனேயே மேற்சொன்ன எல்லா துறைகளுக்கும் நகலாக(Cc -Copy to communicate) அனுப்படவேண்டும்.
பின்பு அந்த தொழிற்சாலையின் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு TNEB distribution முனையிலும் துண்டிக்கப்பட்டு இரண்டு இடங்களிலும் அரசு சீல் வைக்கப்படும். அந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததும் மீண்டும் TNEB, தொடர்புடய TNPCB க்கு கடிதம் மூலம் அறிக்கையாக அனுப்பிவிடும்.
பிறகுதான் அரசு மூடுவதற்கான உத்தரவை தொடர்புடய தொழில் துறை மந்திரி மூலம் தொடர்புடைய மேற்சொன்ன துறைகள் மூலம் அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு அரசு செக்கியூரிட்டிகளை அங்கே போடுவார்கள்..!
இது எல்லா முறைகளும் உடனே நடக்க சாத்தியமற்ற செயல்.. ஏன் எனில், ஒவ்வொரு துறையையும் தாமதப்படுத்த வேதாந்தா நிறுவனம் பணத்தால் நிறுத்தி வைக்கவே முயற்சிக்கும்.
இதை எதுவுமே செய்யாமல் வெறுமனே தொழிற்சாலை இனிமேல் இயங்காது என்று ஒரு தலைமை செயலக லெட்டர்பேட் மூலம் சொல்வது; இப்போதைக்கு மக்களை மடை மாற்றவே என்க!
முதலில் தொழிற்சாலைக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டு EHV Switch Yard-ல் சீல் வைக்கப்படவேண்டும்!
உள்ளே இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் (permanent Shut down) செயல்பாடுகளை முடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேற வேண்டும்.
ஆபத்தான கெமிக்கல் வாயு இன்ன பிற எல்லாம் வெளியேற்றப்படவேண்டும்.
இது எதுவுமே செய்யாமல் ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வதை இந்த அப்பாவி மக்கள் நம்பலாம். ஆனால் என் போன்ற அனுபவம் பெற்ற தொழிற்சாலைகளிலேயே ஊறிப் போன பொறியாளர்கள் ஒருவர்கூட நம்ப மாட்டார்கள்!
ஆக
மக்களை தற்காலிகமாக மடைமாற்றும் ஒரு நாடகமே…!
இவ்வளவு கோடிகளை கொட்டி லாபம் பார்த்த ஒரு முதலாளி ஒருபோதும் மூட விடமாட்டான் இதுதான் உண்மை நிலை என்க!
மூட வேண்டும் என்றால் மேற்சொன்ன அத்தனை ஒப்புதல்களும் மூடுவதற்கான தக்க காரணங்களுடன் எல்லோரும் சமர்பிக்க வேண்டும்.
அதற்கு பிறகுதான் மின்சாரம் துண்டிக்கப்படும்..!
பிறகு ஒவ்வொன்றாக நடைபெறும்..!
இன்றிலிருந்து தொடங்கினாலே இன்னும் ஆறு மாதத்திற்குள் மூட முடியுமே அன்றி, இந்த உடனே ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வது அபத்தமானது!
அதேநேரத்தில்….. இந்த எல்லா நடைமுறைகளும் முடியும்வரை தொழிற்சாலையை இயக்கவோ, பராமரிக்கவோ கூடாது என்று உடனடி அறிக்கையை TNPCB மற்றும் Inspector of factories போன்ற அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையில் தொழிற்சாலை வாயில் கேட் அல்லது சுற்று மதில் சுவரில் ஒட்டி கேட்டில் சீல் வைக்க வேண்டும்..!
அது நடைபெற வேண்டுமானால் முதலில் தொழிற்சாலையின் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும்!
சிந்தியுங்கள்
செயல்படுங்கள்
வெற்றுக் கோபங்களும் அறிவற்ற அரசியல் சிந்தனைகளும் படுகொலையில்தான் முடியும் என்பதற்கு இதுவே சான்று.
எனவே இனிமேல் களபலி கொடுப்பதை தவிர்த்து மேற்சொன்ன அதிகாரிகளை ஆக்கிரமிப்பது நன்மை பயக்கும்!
சொல்ல நிறைய உள்ளது எல்லாவற்றையும் இங்கேயே சொல்லவும் இயலாது…..!
தோழமையுடன்,
பார்த்திபன்.ப
25/05/2018
#Sterlite #BanSterlite #TuticorinMay 28, 2018 at 9:17 pm #3033Ranga Rasu Ra2 hrs
ஸ்டெர்லைட்டை மூட அரசாணை பிறப்பித்திருக்கிறார்கள்.இதில் ஆலையை மூடுவதற்கான காரணங்களாக சுற்றுச் சூழலை காப்பதற்காகவும், காடுகள் காப்பாற்றப் பட வேண்டியதற்காகவும், காட்டு விலங்குகளின் நலனுக்குக்காகவும் இந்த ஆலையை மூட உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவுகள், அதிகமாகிப் போன கேன்சர் நோயாளிகள், இறந்து போன நோயாளிகள், கேன்சர் அல்லாது வேறு நோய்கள் வந்து உடனேயே இறந்து போன பொதுமக்கள்..
கூடவே ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையில் இருக்கும் நச்சு வாயுக்களின் அதிப்படியான அளவு,, நிலத்தடி நீருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு.. அந்த நீரைக் குடிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு.. இதையெல்லாம் அரசாணையில் சேர்த்துக் குறிப்பிட்டிருந்தால் அனைத்து ஆதாரங்களையும் முன் வைத்து வாதாடலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம்.
காடும், காட்டு விலங்குகளும் என்று பேசினால் என்ன ஆதாரத்தை இவர்கள் கொடுக்கப் போகிறார்கள்..? தூத்துக்குடில ஏதுய்யா காடு..?
இந்த அரசாணையை வைத்துத்தானே நீதிமன்றத்தில் விசாரணையே நடைபெறப் போகிறது..?
“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகுற மாதிரி அழு…” என்று அனில் அகர்வாலும், நமது மங்குனி அமைச்சரவையும் சேர்ந்து போடும் ஆட்டம்தான் இது..!
நிச்சயமாக இந்த ஆணையை உச்சநீதிமன்றத்தில் அனில் அகர்வால் உடைத்தே தீருவார்.
#BanSterlite #Sterlite #Tuticorinட
இத்தகவல்கள் அனைத்தும் ஏறத்தாழ சரியே என்கின்றனர் ஆர்வலர்கள்
May 28, 2018 at 9:35 pm #3034ஸ்டெர்லைட் அரசாணை – மீண்டும் மக்களை ஏமாற்றாதே!”
“ஜல்லிக்கட்டு போல சிறப்புச் சட்டமே தீர்வு!”
ஸ்டெர்லைட்டை மூடுவதாக ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கும் நாடகத்தையும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது.
நாளை ஆளுநர் தூத்துக்குடி செல்லவிருக்கிறார். நாளை மறுநாள் சட்டமன்றம் கூடவிருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறு கூராய்வு செய்வது தொடர்பாக எமது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்த “சீல் வைக்கும் நாடகம்” அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை என்பது மக்களை ஏமாற்றும் மோசடி.
“சூழலை மாசுபடுத்தியதற்காக மூடவேண்டும்” என்று 2010-ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2013 இல் உச்சநீதிமன்றம் சென்று ஸ்டெர்லைட் முறியடித்து விட்டது. 2013-ல் நச்சுப்புகை வெளியானதையொட்டி, (இப்போது சீல் வைப்பதைப் போலவே) அன்றைக்கும் ஜெ அரசு சீல் வைத்தது. ஆனால் பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்று ஆலையை மீண்டும் திறந்து விட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு 5 ஆண்டுகளாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த சீல்வைப்பு என்பது ஒரு கபட நாடகம். உண்மையிலேயே நிரந்தரமாக இந்த ஆலையை மூடவேண்டுமானால், “தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை” என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே, ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றியதைப் போல இதற்கும் தனிச் சட்டம் இயற்றவேண்டும். இவ்வாறு செய்வதுதான் இதற்கு சட்ட ரீதியான தீர்வு என்று சூழலியல் ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கூறுகின்றனர். இவ்வாறுதான் மகாராட்டிரத்திலிருந்து ஸ்டெர்லைட் விரட்டப்பட்டது.
தற்போது எடப்பாடி அரசு இந்த அறிவிப்பை செய்வதற்கு காரணம், பத்து லட்சம், இருபது லட்சம் நிவாரணத்துக்கு தூத்துக்குடி மக்கள் யாரும் மயங்கவில்லை. துப்பாக்கி குண்டு காயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கும் மக்கள், “என்றைக்கு ஆலையை மூடுவீர்கள்” என்ற ஒரே கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். “ஸ்டெர்லைட்டை மூடினால்தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம்” என்கின்றனர். எனவே, மக்களை ஏமாற்றி இப்போதைக்கு இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே இந்த மோசடி அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்குப் பதிலாக, இன்னொரு மோசடியை இந்த அரசு செய்திருக்கிறது.
“துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்” என்ற கேள்வியை 22-ம் தேதி முதல் உலகமே கேட்டு வருகிறது. அதற்கு இத்தனை நாட்கள் பதில் சொல்லாத இந்த அரசு, திடீரென்று “துணை வட்டாட்சியர்தான் உத்தரவிட்டார்” என்று ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது.
தொழில்முறை கிரிமினல்கள் ஒரு கொலையைச் செய்து விட்டு, வேறொரு எடுபிடியின் கையில் அரிவாளைக் கொடுத்து சரணடைய சொல்வதைப் போல, முதல்வர் – தலைமைச் செயலர் – டி.ஜி.பி – மாவட்ட ஆட்சியர் – காவல் கண்காணிப்பாளர் மட்டத்தில் சதித் திட்டம் தீட்டி, துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றி விட்டு, அந்தக் குற்றத்தை ஒரு வட்டாட்சியரின் தலையில் போட்டு ஏமாற்றுகின்றனர். இதைவிட அப்பட்டமான மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் கூலிப்படையாகவே எடப்பாடி அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருக்கின்றன. கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காயம்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது இதுவரை முடிவாகவில்லை.
ஒரு சுயேச்சையான புலன் விசாரணையின் மூலம் இவர்களுடைய சதித்திட்டம் விசாரிக்கப்பட வேண்டும். இவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதனை இல்லாமல் செய்வதற்குத்தான் அருணா ஜெகதீசன் என்ற கைப்பாவை நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, இப்படி ஒரு மோசடி முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசு.
இந்த இரண்டு நடவடிக்கைகளுமே, மக்களின் ரத்தக்காயத்தில் உப்பைத் தேய்க்கும் நடவடிக்கைகள். இந்த ஏமாற்றுக்கு பலியாகாமல், நமது கோரிக்கைகளில் உறுதியாக நிற்போம். போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் விரைவிலேயே கூடி முடிவு செய்வார்கள். “அதுவரை இந்த அரசின் எந்தவிதமான அறிவிப்புகளுக்கும் மயங்க வேண்டாம்” என்று போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகர்கள் என்ற முறையில் தூத்துக்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவசரம் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் அரிராகவன்,
வழக்கறிஞர் ராஜேஷ்,சட்ட ஆலோசகர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.