துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் ?

Forums Communities Fishermen துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் ?

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3022

  தூத்துக்குடியில் கடந்த மேய் 22 அன்று, நடந்த துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவிட்டது யார் ? என்பதற்கு ஆதாரமாக அது தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று வெளியாகியுள்ளது.

  அதில் துணை தாசில்தார் (தேர்தல்) என்பவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் ஆஜராகி மனு கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதில்,  குமாரெட்டியாபுரம், , தெற்கு வீரபாண்டியபுரம்,பண்டாரம்பட்டி,மீளவிட்டான்,மடத்தூர் , மாதா கோயில்,மட்டக்கடை,திரேஸ்புரம், புதுத்தெரு,பாத்திமா நகர், லயன்ஸ் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களும், பிற பகுதி மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (22/05/2018) அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும் என்றும், கலைந்து செல்லக் கூடாது என்றும் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். அத்துடன் கலவரம் ஏற்படுத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது என்று கூறும் அந்த முதல் தகல் அறிக்கை, உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் மற்றும் அதன் ஊழியர் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் படி உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆட்சியர் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், இதைத் தொடர்ந்து கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் சில அமைப்புகள் முற்றுகை போராட்டத்தை விட்டு எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்சொன்ன ஊர்களை சேர்ந்த ஒரு சில பிரிவினர் முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் , அதனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் எனவும் கூறி கிராம மக்களை திரட்டியதாக தகவல் கிடைத்தது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லை ஆலை மற்றும் குடியிருப்பு, தென்பாகம் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  இதனையும் மீறி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உட்பட பல்வேறு அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் போலீஸாரின் தடையையும் பொருட்படுத்தாமல் மாதாகோயிலை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தடுப்புகளையும், பொதுச்சொத்துக்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

  காலை 11 மணியளவில் 10000 க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் ஸ்டெர்லைட்டை மூடாத கலெக்டர் ஆபீஸை கொழுத்த வேண்டும் என கோஷம் எழுப்பிய படி அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து முன்னேறியதாகவும் , தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தினுள் நுழைய முற்பட்டதாகவும் கூறும் அந்த அறிக்கை, அதனை தொடர்ந்து  போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசப்போவதாக எச்சரித்ததாகவும் கூறுகிறது. தொடர்ந்துள்ள எச்சரிக்கைகளை பொருட்படுத்தாதால், காவல்துறையினர், வானத்தை நோக்கி சுட்டனர் எனவும், அதனையும் கலவரக்காரர்கள் பொருட்படுத்தாமல் தான் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தொடர்ந்து, ஆவின் பூத் பக்கம் குண்டடிப்பட்ட இருவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி செல்ல முற்பட்ட போது கலவரக்காரர்கள் அதனை மறித்து, வாகன ஓட்டுனர் மற்றும் உதவியாளரின் மண்டையை உடைத்தனர் எனவும்,  தொடர்ந்து  மெயின் ரோடு ஆர்ச் அருகிலும், கலவரக்காரர்களை கலைக்க துப்பாக்கியால் சுட்டனர் எனவும், அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் குடியிருப்பினருகிலும் கலவரம் செய்தவர்களுக்கு எதிராக துப்பாக்கியால் சுட்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

   

  கடைசியாக துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் எனக் கூறி, நடந்த கலவரம் குறித்து விசாரிக்கவும் கேட்டு அந்த மனு முடிந்துள்ளது.

  இந்த மனுவின் அடிப்படையில் பார்க்கும் போது, துப்பாக்கி சூட்டிற்கான உத்தரவை துணை தாசில்தார் சேகர் கொடுத்ததாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால் சேகருக்கு அதற்கான அதிகாரம் உண்டா என்றே பலரும் கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This