ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்காது -அமைச்சர் கடம்பூர் 

Forums Inmathi News ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்காது -அமைச்சர் கடம்பூர் 

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2873

  ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்காது -அமைச்சர் கடம்பூர்

  அமைச்சர் ஆறுதல்

   

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். போலீசார் நடத்திய தடியடியில் பல பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற விவகாரத்தில் சேதமடைந்த வாகனங்களையும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

   

   

  பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

   

  ஆலையை முட வழக்கு

   

  வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டு காலமாக இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற் சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், 24.3.2013 அன்று தொழிற்சாலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை அளிக்கப்பட்டு, பின்னர் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்.

   

  அதன் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அந்த ஆணையில் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மேற்கண்ட உத்தரவினை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகி, 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதி பெற்றது.

   

  அதன் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேற்படி வழக்கு விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

   

  போராட்டம் அறிவிப்பு

   

  இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் இதனை புதுப்பிக்க கோரிய போது, ஏற்கெனவே பிறப்பித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதனை நிராகரித்தது. அன்று முதல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கவில்லை.

   

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எஸ்.ஏ.வி. மைதானத்தில் அமைதியாக எதிர்ப்பினை தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள். இதனையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என அறிவித்திருந்தார்கள்.

   

  144 தடை உத்தரவு

   

  அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த உத்தரவினை மீறி தீய சக்திகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அசம்பாவித செயல்களில் ஈடுபட்டார்கள். இதில் 98 வாகனங்கள் தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். 46 வாகனங்கள் தீயினால் பகுதி சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும். இதனை கட்டுப்படுத்த காவல் துறையினரால் கண்ணீர் புகை குண்டு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், தீய சக்திகளை கட்டுப்படுத்த இயலாக நிலையில் அசம்பாவிதத்தில் 13 நபர்கள் உயிரிழந்தார்.

   

   

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிலைமையை கண்காணிக்கவும், இயல்பு நிலை அடைய மேற்கொள்ளவேண்டிய பணிகளை கண்காணிக்கவும், தமிழ்நாடு அரசால் போக்குவரத்துதுறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிட்தார் வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டார்கள். கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்கானிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

   

  துரித நடவடிக்கை

   

  பொதுமக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக அம்மா உணவகத்தில் 3 நாட்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்காலிக ஆவின் பூத் அமைக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

   

  அசம்பாவித்ததில் காயமடைந்தவர்களுக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 180 புறநகர் பேருந்துகள் மற்றும் 105 உள்ளுர் பேருந்துகள் இயக்கப்பட்டு பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தினை தவிர்க்கப்பட்டது.

   

  மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வங்கியாளர்கள், மினி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள், பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்த மீனவ சங்கப்பிரதிநிதிகள், அருட்தந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்ப துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

   

  ஆலை இயங்க…

   

  நேற்றைய தினத்திலிருந்து மாவட்ட முழுவதும் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டது. மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவித்தத்தில் 13 நபர்கள் உயிரிழந்தார்கள் இதில் 7 நபர்களின் உடல்கள் குற்றவியல் நடுவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. 105 நபர்கள் காயமடைந்துள்ளார்கள் இதில் 54 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

   

  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 25.05.18 அன்று முதல் இணையதள சேவை சீராகி உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று  இரவுக்குள் இணையதள சேவை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு 98 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. மக்களுக்கு பயன்படாத எந்த திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு பாதிப்பு உண்டாகும். எவ்வித செயலாக இருந்தாலும், முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்பதை பொது மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். 100 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலையினை இயக்குவதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

   

  இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This