தூத்துக்குடி கலவர பகுதியில் அமைதி திரும்பியது- தமிழக அரசு அறிவிப்பு

Forums Inmathi News  தூத்துக்குடி கலவர பகுதியில் அமைதி திரும்பியது- தமிழக அரசு அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2849

  தூத்துக்குடி கலவர பகுதியில் அமைதி திரும்பியது-
  தமிழக அரசு அறிவிப்பு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தினால் அந்த மாவட்ட பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 90 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி தெரிவித்தார்.

   

  முற்றுகை போராட்டம்

   

  தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, அதை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில், தொடர் போராட்டத்தின் நூறாவது நாளான 22- ந்தேதிஅன்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தினார். இது கலவரமாக மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் மாண்டனர். பலர் காயமடைந்ததும் தெரிந்தே.

   

  இந்நிலையில், பாதிப்புக்குள்ளான அந்த மாவட்டத்தில், மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை அந்த மாவட்டத்திற்கு தமிழக அரசு அனுப்பியது. அதன்படி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று அங்கு சென்று கள ஆய்வு நடத்தினர்.

  இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு:

  தூத்துக்குடி மாவட்டத்தில் நிலைமை இயல்பு நிலை அடைய மேற்கொள்ளவேண்டியப் பணிகளை கண்காணிக்க, தமிழ்நாடு அரசால், போக்குவரத்துதுறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் டேவிதார். வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளார் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

  இந்த நிலையில் நேற்று வேளாண்மைதுறை அரசு முதன்மை செயலாளார் ககன்தீப் சிங் பேடி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோருடன் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகளை பார்வையிட்டனர்.

   

  அப்போது ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துதுறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் ‘‘பி.டபிள்யூ.சி.டேவிதார், தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோபி ஆகிய தொலை தூரங்களுக்கு சீரான இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும், மொத்தம் 180 புறநகர் பேருந்துகளும், 105 உள்ளுர் பேருந்துகள்; இயக்கப்பட்டு வருகிறது’’ என்றார். அங்கு பயணிகளுடன், பேருந்து வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது, ‘இயல்புநிலையில் பயணிக்க முடிகிறது’ என பயணிகள் தெரிவித்தனர்.

   

  நிர்வாகம் பொறுப்பு

  மேலும், தூத்துக்குடியில் நான்கு நாட்களுக்கு பின்னர் தற்போது முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வேளாண் விற்பனை, ஆவின் பாலகம், நியாய விலைக்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், மருந்து கடைகள், காய்கறி மார்கெட் போன்றவைகள் திறக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

   

  கண்காணிப்பு அலுவலர்கள் பி.டபிள்யூ.சி.டேவிதார், ககன்தீப் சிங் பேடி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வின் போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில், 169 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.51 லட்சம் மதிப்பில் 53 ஆயிரம் பொதுமக்களுக்கு வேளாண்சந்தை, நியாயவிலைக்கடைகள், காய்கறி மார்கெட், உழவர் சந்தை ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது’’ தெரிவித்தனர்.

   

  இணைய தள வசதி

   

  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமார் மாவட்டங்களில் நேற்றய தினமே இணையதள வசதிகள் சீராக வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இன்று (நேற்று) மாலைக்குள் இணையதள வசதி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

  தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்தில் உயிரிழந்த 13 நபர்களில், இதுவரை 7 நபர்களின் உடல்கள், உடற்கூராய்வு குற்றவியல் நடுவர்கள் முன்னிலையில் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 நபர்களின் உடல்கள், உடற்கூராய்வு செய்ய மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

   

   

  சம்மந்தப்பட்ட நபர்களின் உறவினர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. காயம் அடைந்தவர்களுக்கு மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில், காயமடைந்த 52 நபர்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

  ஏ.டி.எம் சென்டர்களை திறக்க தொடர்புடைய வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.

   

  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மினி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்தாலோசனைக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் மினி பஸ்களை இன்று (நேற்று) மாலைக்குள் முழுமையாக இயக்கப்படும் என கூட்டத்தில் உறுதியளித்தார்கள் அவர்களுக்கு தேவையான பாதுகப்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலம் ஏற்படுத்தி தரப்பட்டும் என தெரிவிக்கப்பட்டது.

   

  நடவடிக்கை

   

  மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நேற்று) பிற்பகல் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள், பேராயர்கள் கலந்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர். அதற்கு, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்படவில்லை. மேலும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கான அனுமதியும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

  இந்த ஆய்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பி ஜாண் வர்க்கீஸ், சார் ஆட்சியர் பிரசாந்த், போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் மோனி, திருநெல்வேலி மண்டல மேலாளர் சமுத்திரம், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) சிவகாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

   

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This