அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி – பழனிச்சாமி

Forums Inmathi News அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி – பழனிச்சாமி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2714
  sankar s
  Participant

   

   

  சென்னை, மே.24–

  தூத்துக்குடியில் வேண்டுமென்றே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சிகளும், சமூக விரோதிகளும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

  ஸ்டெர்லைட் விவகாரத்தில் பலமுறை போராட்டம் நடத்தினார்கள். அமைதியாக அறவழியில் அந்த போராட்டங்கள் நடந்தன. இப்போது தான் வேண்டுமென்றே இத்தகைய சூழ்நிலையை எதிர்க்கட்சிகள், சமூக விரோதிகள் ஊடுருவி மோசமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும முதல்வர் கூறினார்.

  ஸ்டெர்லைட் ஆலையை மூட அம்மாவின் அரசு சட்டத்தின் மூலம் அணுகி நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  தான் தூத்துக்குடி செல்லாதது ஏன் என்பது பற்றியும் முதலமைச்சர் விளக்கினார்.

  சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:–

  அம்மா இருக்கின்ற காலத்திலேயே 23.3.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையிலே, அம்மா 29.32013 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்இணைப்பை துண்டித்தார்.

  31.5.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த மின்சார இணைப்பை கொடுக்க வேண்டும் என்றும், அதோடு அம்மா இருக்கின்றபொழுதே அந்த ஸ்டெர்லைட் ஆலையினுடைய உரிமத்தை ரத்து செய்தார்கள். அதையும் எதிர்த்து அந்த நிர்வாகம் 31.5.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்றார்கள். 31.5.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்கள், அதற்கு 8.8.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வழங்கியது, சில நிபந்தனைகளை விதித்து அந்த ஆலையை துவக்கிக் கொள்ளலாம் என்று ஒரு தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியது.

  அம்மா 2013-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்து, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. 9.4.2018 அன்று, ஆலையை தொடர்ந்து இயக்க நிர்வாகம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் செய்தது. அம்மாவினுடைய அரசு அதை நிராகரித்து விட்டது.

  மின்சாரம் துண்டிப்பு

  அவர்கள் விண்ணப்பித்ததை புதுப்பிப்பு செய்யவேண்டும் என்று செய்ததை அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினுடைய உத்தரவின்பேரிலே இன்று மின்சார வாரியம் ஆலைக்கு வழங்கக்கூடிய அந்த மின் இணைப்பை துண்டித்து விட்டது. ஆகவே, அம்மாவினுடைய அரசு தொடர்ந்து மக்களுடைய உணர்வை மதித்து, அம்மா 2013-ல் இந்த ஆலை மூடுவதற்கு என்ன பணியை மேற்கொண்டார்களோ, அதை அம்மாவினுடைய அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. வேண்டுமென்றே சில எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, இப்படி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

  14 முறை பேச்சுவார்தை

  அம்மாவினுடைய அரசு கிட்டத்தட்ட ஒரு 4, 5 மாத காலமாக, 14 முறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலே, சார்பதிவாளர் ஆட்சியாளரும், போராட்டக்காரர்களை அழைத்து அரசால் எடுத்த நடவடிக்கை விளக்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், 14.4.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் விளம்பரம் செய்திருக்கிறார். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக விளம்பரம் செய்திருக்கின்றார். அந்த விளம்பரம் எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. தினத்தந்தி பத்திரிகையில் அழகாகவே போட்டிருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை 2011லிருந்து 2013 வரைக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் புதுப்பித்து விண்ணப்பம் செய்யப்பட்டது, அது 9.4.2018 அன்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி முழுவதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, ஆலையை இயக்க முடியாது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது. இத்தனையும் தொடர்ந்து அந்தப் பகுதி மக்களுடைய உணர்வுகளை, அவர்களுடைய வேண்டுகோளை அம்மாவினுடைய அரசால் சட்டத்திற்குட்பட்ட நிறைவேற்றப்பட்டு வருகிறது.

  எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்

  அதுமட்டுமல்லாமல், பலமுறை போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். நடத்துகின்றபொழுதெல்லாம், அமைதி காத்து, அறவழியிலே போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.

  ஆனால், இந்த முறை வேண்டுமென்றே சில எதிர்க்கட்சிகளின் துண்டுதலின்பேரிலும், சில சமூக விரோதிகள் ஊடுருவி அப்பாவி ஜனங்களை பயன்படுத்தி இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

  உண்மையிலேயே இன்றையதினம் உயிரிழந்த அத்தனைபேருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த வேதனையும், துயரமும் நாங்கள் அடைந்துள்ளோம். ஏனென்று சொன்னால் அரசால் இவ்வளவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்களோ, அதையெல்லாம் அரசால், சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருக்கிறது. இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 9.4.2018 அன்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பித்தும் நிராகரித்தோம். அதற்கும் உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  மூட நம்பிக்கை

  அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதுகூட கடுமையாக அரசின் சார்பாக வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருந்தது. ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு. இந்த ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரைக்கும் அதை மூடுவதற்குண்டான நடவடிக்கையை அம்மாவினுடைய அரசு சட்டத்தின் வாயிலாக இன்றைக்கு அணுகி அதை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

  ஆகவே, அன்றையதினம் நடைபெற்ற சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். ஆகவே, இன்றைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தடை உத்தரவிலே, இன்றைக்கு ஒரு பொதுக்கூட்டமோ, ஒரு ஆர்ப்பாட்டமோ, ஒரு ஊர்வலமோ நடத்தக்கூடாது. ஆகவே, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் இந்த உத்தரவே போடப்பட்டது. ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  கேள்வி: எதிர்க்கட்சித்தலைவர், முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ நேரில் செல்லவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

  பதில்: தவறான குற்றச்சாட்டு. நேற்றையதினம்கூட ஸ்டாலின் போய் சந்தித்து வந்திருக்கிறார். 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. முதலிலே சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கே அமைதி நிலவ வேண்டும். இயல்புநிலை திரும்ப வேண்டும். பொதுமக்கள் அச்சமில்லாமல் வாழவேண்டும். பொதுச் சொத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

  துப்பாக்கிச் சூடு ஏன் ?

  கேள்வி: துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன, அதற்கான காரணம் என்ன?

  பதில்: அதாவது, நீங்கள் அத்தனைபேரும், நாங்களும் இங்குதான் இருக்கிறோம். நான் அப்பொழுது ஆய்வுக் கூட்டத்திலே இருந்தேன். நீங்களெல்லாம், பத்திரிகையாளர்கள் எல்லாம் ஆய்வுக்கூட்டத்திற்கு வந்திருந்து, ஊடக நண்பர்களெல்லாம் வந்து என்னை படம் பிடித்தும் போட்டீர்கள். நான் இங்கே இருக்கின்றேன். ஆகவே, ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கின்றபொழுது, அமைதியான முறையில்தான் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை அப்படியல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில சமூக விரோதிகள் இதில் ஊடுருவி, இதைப் பயன்படுத்தி, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், அவப்பெயரை உண்டாக்க வேண்டும், ஒரு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த சுழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே, இன்றைக்கு ஊர்வலம் வந்தவர்கள் அங்கே இருக்கின்ற காவல் துறையினரை தாக்கிய பிறகு, அவர்கள் முதலிலே கண்ணீர் புகையை வீசினார்கள், பிறகு தடியடி பிரயோகம் செய்தார்கள், பிறகு அதையும் மீறி அங்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருக்கின்ற வாகனத்திற்கு தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. அதற்கு அருகாமையிலே இருக்கக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையினுடைய குடியிருப்புக்குள் புகுந்து அங்கே இருக்கின்ற வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு, அங்கே உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். இதையெல்லாம் உங்களுடைய தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் நாங்களும் தெரிந்து கொண்டோம். ஊடகத்தைப் பார்த்துத்தான் நாங்களும் தெரிந்து கொண்டோம். ஏனென்றால், நான் இங்கேதான் இருந்தேன், உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆகவே, இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படுகிறபொழுது, ஒரு மோசமான சூழ்நிலை நிலவுகின்றபொழுது, ஒரு பதட்டமான நிலை நிலவுகின்றபொழுது இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்றது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  கேள்வி: சுடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது?

  பதில்: அனுமதி என்பதெல்லாம் இங்கில்லை, ஒரு உயிருக்கு, உங்களை அடிக்கிறார்கள், டக்கென்று ஒருவர் தடுக்கத்தான் பார்ப்பார்கள். இது இயற்கை, இதில் யாரும் திட்டமிட்டு செயல்படுவதே கிடையாது.

  கேள்வி: ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?

  பதில்: இப்படியெல்லாம் ஒரு கலவரம் நடைபெறும் என்று தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாகவே கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறுகின்றபொழுது, அங்கே இருக்கின்றவர்கள், அவர்களது உணர்வை பிரதிபலிக்கின்ற விதமாக அமைதியாக அந்த ஊர்வலத்திற்கு செல்வார்கள். அங்கே இருக்கின்ற மாவட்ட ஆட்சித்தலைவரிடத்திலோ, சார்பதிவாளர் ஆட்சியரிடத்திலோ தங்களுடைய குறைகளைச் சொல்லி பரிகாரம் பெற முற்படுவார்கள், அதோடு அரசுக்குத் தெரிவிப்பார்கள். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தொடர்ந்து அவர்கள் வைத்த கோரிக்கை முழுவதும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் சொன்னமாதிரி, சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூக விரோதிகளும் ஊடுருவி இதை ஒரு தவறான பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

   

  Attachments:
Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This