தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட நடந்த போராட்டத்தில் போலீஸார் சுட்டதில் 10 பேர் பலியாயினர்.
இந்நிலையில் நடந்தது என்னவென்பதை நேரில் கண்ட தூத்துக்குடியை சேர்ந்த கோபி என்பவர் கூறியதாவது :
காலையில் நானும் எனது நண்பர்கள் சில பேருமாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம். ஆங்காங்கே, இருந்த மக்கள், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தனர். ஊர்வலம் கலெக்டர் ஆபீஸை நெருங்கியதும், போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுடத் துவங்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். போலீஸார் தான் இதனை தொடங்கி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து போலீஸாரும் தாக்கினர்” எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,” இரண்டு தினங்களுக்கு முன்னரே போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை எஸ்.ஏ.ஜி கிரவுண்டில் வைத்து நடத்துங்கள் என்று சொன்னார்கள். அதை போராட்டக் குழுவின் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டனர். மற்றொரு தரப்பினர் அதை ஏற்காமல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் எனக் கூறினர். இன்று காலையில் எந்தவித அரசியல் கட்சி கொடிகளையோ , வேறு அடையாளங்களையோ அவர்கள் வைத்திருக்க அனுமதிக்கவில்லை. ” எனக் கூறினார்.