கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை கிழித்தெறிந்து, உபகரணங்களை கடலில் வீசி விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் இன்று காலைநிகழ்ந்துள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து 50 படகுகளில் சுமார் 200 மீனவர்கள் சென்று கடலில் கச்சத்தீவு அருகில் இன்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டி அவர்களின் வலைகளை கிழித்தெறிந்தனர். மீனவர்களின் உபகரணங்களை உடைத்து கடலில் தூக்கிபோட்டனர்.
பின்னர் அங்கிருந்து மீனவர்களை விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையினரின் செயலால் அச்சமுற்ற தமிழக மீனவர்கள் வலைகளை, உபகரணங்களை இழந்து உயிர்தப்பினால் போதும் என்று தப்பித்து கரை திரும்பினர் .
ஏற்கனவே தமிழகமீனவர்கள் இலங்கை அரசால் சிறை தண்டனையும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் சூழலில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தமிழக மீனவர்ள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ஷேவும் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றுள்ள சூழல் தமிழக மீனவர்களை பெரும் துயரத்தை ஆழ்த்தியுள்ளதாக மீனவ சமுதாய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.