மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்த மீனவர்கள் ,பால் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கான ‘ கிசான் கிரடிட்கார்டு’ எனப்படும் கடன் அட்டை இன்னும் ஒருசில நாட்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர் கடன்களை சுலபமாகவும் குறைந்த வட்டி விகிதத்திலும் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் ‘கிசான் கிரடிட்கார்டு’ எனப்படும் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற ‘கிசான் கிரடிட்கார்டு’ வசதி மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படும் என்று கடந்த 2018 – 19ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது .
2018 பிப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்ட போது மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் .
அதன்படி, மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு விவசாய கடன் அட்டை ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
விவசாய கடன் அட்டை மூலம் கடன் பெரும் மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 2 அல்லது 3 % வட்டியில் கடன் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கான கடன் அட்டை தவிர்த்த வங்கிகளின் பிறகடன் உதவிகளுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 8 சதவீதம் மற்றும் அதற்குகூடுதலான விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்த கிசான் கார்டு, மீனவர்களுக்கு விஸ்தரிக்கப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வங்கிகளுக்கு வழங்குமாறு ரிசர்வ்வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வருகிற 2022ம்ஆண்டுக்குள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது .
அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மீன்வளகட்டமைப்புக்கு ரூ7500 கோடி நிதி ஆதாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல் பால் உற்பத்தியை பெருக்க ரூ 2500 கோடி நிதி ஆதாரம் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.