தொழிற்சாலைகளின் அசுத்தம் கழிவுகள், நகராட்சியின் அசுத்த கழிவுகள் கலந்ததால் மேட்டூர் அணை நீர் மாசு அடைந்து பச்சை நிறமாக மாறி மக்களுக்கும் , கால் நடைகளுக்கும் நோய் தொற்று அபாயமும் , மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது .
கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜசேகர், கபினி அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இரண்டு அணைகளும் பெருமளவில் நிரம்பி அங்கிருந்து அவ்வப்போது ஏராளமான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது .
வரலாறு காணாத தண்ணீர் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டதால் காவிரிநதியில் தண்ணீர் வரத்து அதிகமாகி கடந்த ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 11 ஆகிய இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது . அவ்வப்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் தேவையான அளவு அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் அணையில் இரண்டு பக்கங்களின் கரைகளில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகள் தங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை அணைநீரில் திறந்து விட்டுள்ளனர் . அதே போல் நகரங்களில் கழிவுநீர்களும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில்விடப்பட்டுள்ளது இதனால் கடந்த சனிக்கிழமை முதல் அணை நீர்முழுமையாக மாசுபட்டு பச்சை கலர் நீராக காட்சியளிக்கிறது .
இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அணை நீரின் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர் .
அணையில் வலது, இடது புறங்களில் அமைந்துள்ள பன்னவாடி , சேத்துக்குளி , கோட்டையூர் உள்ளிட்ட மீனவ கிராமமக்கள் ஆற்று நீர் மாசு படிந்துள்ளதால் மீன் பிடிக்கசெல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மனிதர்களுக்கும், ஆற்று நீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் தொற்றுநோய் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்த்துள்ளனர் .
இதனால் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ள அப்பகுதி உள்நாட்டு மீனவமக்கள் ,விவசாயிகள் , மற்றும் கால்நடைகளை காப்பாற்ற தமிழகஅரசு உடனடி போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
தொடர்ந்து கழிவுநீர் ஆற்றிலும் ,அணையில் தேங்கியுள்ள நீரிலும் கலக்காமல் இருக்க தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனினும் அவர்கள் கோரியுள்ளனர் .