தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்

Forums Communities Farmers தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Inmathi Staff 9 months, 3 weeks ago.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14965

  Inmathi Staff
  Moderator

  தென்னையில் ‘குரும்பைக் கொட்டுதல்’ பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், மண்ணின் களர் உவர் தன்மைகள், மகரந்தச் சேர்க்கைக்குறை, பூச்சிநோய் தாக்குதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணுாட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் பற்றாக்குறைகளை வேர் மூலம் தென்னை ஊட்டச்சத்து டானிக் செலுத்துவதால் நிவர்த்தி செய்து விடலாம்.

  ஊட்டசத்து டானிக் அவசியம்:

  தென்னை ஊட்டச்சத்து என்பது தென்னைக்கு வேர் மூலம் ஊட்டுவதற்கு உகந்ததாகும். இந்த தென்னை ஊட்ட மருந்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இத்துடன் மரத்துக்கு தேவையான ஆக்ஸின், சாலிசிலிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மரத்தின் கார அமில நிலைக்கேற்ப டானிக்கின் கார அமில நிலையும் அமையுமாறு டானிக் தயார் செய்யப்படுகிறது. இதனால் டானிக் மரத்திற்குள் சென்று மரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல், மரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சேதாரம் இன்றி தருகிறது. எனவே மரத்திற்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களை சரியான விகிதத்தில் நேரடியாக மரத்திற்குள் செலுத்த முடிகிறது. மேலும் மரத்தில் நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

  வேர் மூலம் ஊட்டச்சத்து

  மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்த பகுதியில் பென்சில் கணமுள்ள மஞ்சள் நிற வேர் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் வேரின் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு உபயோகித்து சாய்வாக சீவி விடவும். பின் டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நுாலால் கட்டி விடவும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஒரு மரத்திற்கு 200 மில்லி டானிக் தேவைப்படும். ஊட்டச்சத்து டானிக் அளிப்பதன் மூலம் முக்கியமான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன.

  இலைகளில் பச்சையம் அதிகரித்து, ஒளிச்சேர்க்கை மேம்படுவதால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர் வேதியியல் பணிகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் வீரியம் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களும், ஆக்ஸின் போன்ற வளர்ச்சி ஊக்கியும் டானிக்கில் உள்ளதால் குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைகின்றது. பூச்சி, நோய், வறட்சி, தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயற்கையான எதிர்ப்புச்சக்தி மரத்தில் உருவாகிறது.

  தென்னை ஊட்டச்சத்து தேவை மற்றும் விவரங்களுக்கு ‘பேராசிரியர் மற்றும் தலைவர், விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை, வேளாண்மை கல்லுாரி, மதுரை அல்லது விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை, கோவை’ என்ற முகவரியில் அணுகலாம்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This