சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று காலையில் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலையை மாற்றி, புதிய சிலைகளை வைப்பதற்கான தேதியை முடிவு செய்வது குறித்தும், கட்சியில் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.