திருச்சி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் ரகம் சொர்ணமசூரி. இது பொன்னிறம் கொண்ட நெல் என்பதால், சொர்ணமசூரி என்கின்றனர். சொர்ணம் என்றால் தங்கம். தங்கம் போல் ஜொலிக்கக்கூடிய இந்த ரகத்தை, உணவுக்காக இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள்.
தற்போது தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் இந்த ரகம், திருந்திய நெல் சாகுபடி முறைக்கு ஏற்றது. 130 நாள் வயதுடைய சன்ன ரகம், வெள்ளை அரிசி. ஏக்கருக்கு இருபத்தி எட்டு மூட்டை மகசூல் கிடைக்கும்.
Courtesy: Hindu
எளிமையான பராமரிப்பு
ஆற்றுப் பாசனம் மற்றும் பம்ப்செட் வசதி உள்ள பகுதிகளுக்கு ஏற்ற ரகம். நேரடி விதைப்பைவிட, நடவுக்கு ஏற்றது. இயற்கை சீற்றங்களுக்கு ஓரளவு தாக்குப்பிடிக்கக் கூடியது. ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்தால், அதிக மகசூல் எடுக்க முடியும். பயிரில் அதிக சொனை இயற்கையாகவே அமைந்திருப்பதால், பூச்சி தாக்குதல் முற்றிலும் இருக்காது.
பிரியாணிக்கு ஏற்றது
இந்த ரகம் சன்னமாகவும் வடித்த சாதம் வெண்மை நிறத்திலும் சுவையாகவும் இருக்கும். பாரம்பரிய நெல் வகையில் சீரகச் சம்பாவுக்கு அடுத்த நிலையில் பிரியாணி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது சொர்ணமசூரி. இதனுடைய பழைய சாதமும், நீராகாரமும் மிகுந்த சுவையாகயிருப்பதால் மூன்று நாட்களானாலும் வீணாகாமல் சாப்பிடக்கூடியது.
அதிகப் பயன்கள்
ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ அரிசி பயன்படுத்தினால் இந்த அரிசியை எழுநூற்று ஐம்பது கிராம் பயன்படுத்தினால் போதும்.
நோய் எதிர்ப்புசக்தி கொண்ட இந்த அரிசியைப் பித்தம், வாயு போன்ற தொல்லைகளுக்குக் கஞ்சி வைத்துக் குடித்தால் நோய் பாதிப்பு குறையும். இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், எப்படிப்பட்ட நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இப்படி உணவு, உணவு சார்ந்த பலகாரம் மட்டுமல்லாமல் மாமருந்தாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புசக்தியையும் இந்த அரிசி தருகிறது.