மீனவர்கள் நலன்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சட்டத்தைப் போல, மீனவர்கள் நலனை பாதுகாக்க சட்டம் இயற்ற பரிந்துரை செய்தது. அதன்படி மீனவர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் போது 2009-ல் சட்டத்தை எந்த துறை இயற்ற வேண்டும் என அப்போதைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அப்போதைய மற்றொரு மத்திய அமைச்சர் சரத்பாவாருக்கு கடிதம் எழுதியதாகவும், தற்போது வரைவு சட்டம் தயாராக உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.