பங்களாதேஷ் நாட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்கள் மூலம் நோய் பரவாமல் இருப்பதை தடுப்பதற்காக புதிய சட்டம் இயற்றுவதற்கான சட்ட மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“மீன் பாதுகாப்பு தனிமைப்படுத்துதல் சட்டம் 2018 என்ற பெயரில் ஒரு புதிய சட்ட மசோதா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பங்களாதேஷ் நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் நாராயண சந்திர சந்தா மசோதாவை தாக்கல் செய்தார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்கள் மூலம் நோய் தொற்று கிருமிகள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி அந்த நாட்டுக்குள் இறக்குமதி மூலம் கொண்டுவரப்படும் கடல் உணவு மற்றும் உள்நாட்டு வளர்ப்பு மீன்வகைகளை சாலை, விமானம், மற்றும் நீர் போக்குவரத்து மூலம் கொண்டு வரும்போது அவைகளை கண்காணித்து, பரிசோதித்து, கிருமிகள் இல்லை என்று கண்டறிந்து நாட்டுக்குள் அனுமதி வழங்கும் அதிகாரம் மீன்வளத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மீன் இறக்குமதி செய்யும் நிறுவனம் அல்லது தனிநபர்களுக்கு ஓராண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பங்களதேஷ் மதிப்பில் 5 லட்சம் டகா அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.