தேவர் ஜெயந்தியை யொட்டி மதுரை வங்கியில் இருந்து தேவர் தங்க கவசம் விழாக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் தேவர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் போது அவரது சிலைக்கு அணிவிக்க 13 கிலோ தங்கக் கவசம் ஒன்றை கடந்த 2014-ஆம் ஆண்டு வழங்கிய ஜெயலலிதா மதுரை பாங்க் ஆப் இந்தியா கிளையில் அதனை வைத்திருக்கவும் விழாவின்போது அ.தி.மு.க. பொருளாளர் மூலம் தங்கக் கவசத்தை விழா குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவின் போது தங்கக் கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழா வரும் 28, 29, 30 ஆகிய தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க. பொருளாரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் வங்கியில் இருந்து கவசத்தை பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தியம்மாளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தங்க கவசம் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.