குட்கா வழக்கில் சிறையில் உள்ள உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இவர்கள் இருவரும், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சிபிஐ நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தரப்பில், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இன்னும் முடியாததால் ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதை ஏற்ற நீதிபதி, விசாரணை முடிவடையாமல் ஜாமீன் வழங்க முடியாதென கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, குட்கா வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சம்பத், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி தண்டபாணி விசாரித்தபோது, சம்பத்துக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதியவில்லை என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கு இல்லாமல் முன்ஜாமீன் மனு தேவையற்றது என கூறிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.