நாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தங்கள் தரப்பில் எம்.எல்.ஏ. கருணாஸ், தகுதிநீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து 23 பேர் இருப்பதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமது ஆதரவாளர்களின் தொகுதிகளில் அடிப்படை வசதிகள் எதையுமே அரசு நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார். இதனால், அந்த தொகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக கூறிய அவர், அதற்கான தேதிகளையும் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களிடம் மீண்டும் சவால் விடுவது நேரத்தை வீணடிக்கும் என்றும், மதச்சார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் தெரிவித்தார்.
அதன்பின்னர், டிடிவி.தினகரனுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. கருணாஸ், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமது தொகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினார்.