நெடுஞ்சாலை டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஒட்டன்சத்திரம், அவினாசி, தாராபுரம் சாலை டெண்டர்கள் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று அவர் கூறினார். மேலும் உலக வங்கி நடைமுறையின்படி தான் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது என்றும், இதில் அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு மட்டும் அரசு 14,719 கோடி ரூபாய் செலவழிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அரசின் நிதிநிலைக்கேற்ப தேவையானவற்றை செய்து வருகிறோம் என்றும், அரசின் நிதிநிலை அரசு ஊழியர்களுக்கு நன்கு புரியும், அதற்கேற்ப ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தாம் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மழையால் தேங்கியுள்ள நீரை அகற்றி, டெங்கு கொசு உற்பத்தியாகாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். டீசல் விலையேற்றத்தால் டெண்டர் எடுத்த நிறுவனங்களுக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான பொருட்களின் விலை 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசு டெண்டர் விட்டத்தில் யாருக்கும் எந்த சலுகையும் வழங்கவில்லை என்றும், டெண்டர் பணிகளே முழுமை அடையாத நிலையில், முறைகேடு என் எப்படி கூற முடியும் என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.