சென்னை திருவான்மியூரில் நடைபாதையில் தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னையில் தங்கி கட்டிட வேலைகளை பார்த்து வருகிறார். இவர் திருவான்மியூர் வால்மீகி கோவில் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் குடிபோதையில் வந்த 2 பேர், சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளனர். தம்மிடம் சிகரெட் இல்லை என கிருஷ்ணமூர்த்தி கூறியதால், ஆத்திரமடைந்த இருவரும், ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை கிருஷ்ணமூர்த்தி மீது ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் அலறியடித்து சாலையில் ஓடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீக்காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், திருவான்மியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், விஜயராஜா ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.