புயலில் திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் வந்த இலங்கை மீனவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து தமிழக அரசு மனிதாபிமானத்துடன் உத்திரவிட்டுள்ளது.
புயலில் திசை மாறி , ராமேஸ்வரம் அருகே கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை, சொந்த நாட்டிற்கு அனுப்ப , தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரி யதாஸ், ( 37). இவர், 2017 டிச, 1ல், பைபர் படகில் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்த போது, புயலில் திசை மாறி, தமிழக கடற் பகுதிக்குள் வந்து, படகு கவிழ்ந்தது.
கடலில் தத்தளித்தவரை, ராமேஸ்வரம் மீனவர்கள் கரை சேர்த்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஜமீனில் வந்தவர் தூத்துக்குடியில் உள்ள சகோதரி கவுரி வீட்டில் தங்கியுள்ளார்.
இலங்கையில், மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தனியாக தவிப்பதால் இலங்கைக்கு அனுப்ப வேண்டி, ராமநாதபுரம் இலவச சட்ட உதவி மைய செயலர் ராமலிங்கத்திடம் மனு செய்தார். விசாரணையில், மீனவர் மீது எந்த குற்றமும் இல்லை ‘ என்பது உறுதியானது.
அவர் மீதுள்ள வழக்கில் முகாந்திரம் இல்லாததால், போலீசார் வழக்கை ரத்து செய்தனர். கலெக்டர் தலைமையிலான கூட்டுக்குழு கூட்டத்தில், மரியதாசை இலங்கைக்கு அனுப்ப , அரசுத் துறை செயலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அரசு முதன்மை செயலர், செந்தில்குமார், மீனவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப, கலெக்டர் வீரராகவராவுக்கு உத்தரவிட்டுள்ளார்.