பகரைன் நாட்டில் தங்கி அந்த நாட்டின் மீன்பிடி படகில் சென்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த குமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதி அரேபியா கடல் படையினரால் கடலில் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் அமலாதாஸ், சகாயராஜி கோபி, முத்துக்குமார சாமி, பாரதி, தண்டபாணி, நந்தகுமார், குட்டியாண்டி, அந்தோணி, மைக்கேல், ஆசீர்வாதம், அஜய், பாலகிருஷ்ணன், வைரமூர்த்தி, குணசேகர் , வைரமுத்து, ஏழுமலை, மதியரசன், செல்வம் உள்பட 30 தமிழக மீனவர்கள் பக்ரைன் நாட்டிற்கு சென்று அங்குள்ள மீன்பிடி நிறுவனங்களில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள அல்மோஜ், பெய்ரூட் என்ற இரண்டு படகுகளில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கடலின் எல்லை தாண்டி சவுதி அரேபிய கடலுக்குள் நுழைந்ததாக கூறி சவுதி அரேபியா கடல் படையினர் 30 மீனவர்களையும் கைது செய்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகி குமரி மாவட்ட மீனவ சமுதாய தலைவர் ஜஸ்டின் அந்தோணி, பக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதராக அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
குமரி மாவட்ட மீனவர்கள் கைது பற்றிய தகவல்களை தேசிய மீனவர் பேரவை அகில இந்திய செயலாளர் செல்வி கிரிஸ்டி ரமணி மூலம் அறிந்த தேசிய மீனவர் பேரவை தலைவரும் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. இளங்கோ இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.