சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை முதல் குடிநீர் கேன் உற்பத்தி நிறுத்தப்படும் என குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க கோரி முதற்கட்டமாக 3 மாவட்டங்களில் உள்ள 450 நிறுவனங்களில் 300 நிறுவனங்களை மூட உள்ளதாக கேன் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசாணையை பின்பற்றி நிறுவனங்களை மூட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மூன்று மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள், கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. போராட்டம் தொடரும் பட்சத்தில், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. வேலை நிறுத்தம் தொடருமானால் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.