மதுரை குருவித்துறையில் சித்திரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் மீட்கப்பட்டது. சாலையோரம் வீசப்பட்டிருந்த 4 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஸ்ரீ குருபகவான் சன்னதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன. வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு கடவுளர்களின் சிலைகளையும் காணாமல் போனது. உடனனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை சாலையோரம் வீசப்பட்டிருந்த 4 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அதனை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சோழவந்தான் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் ஆய்வு செய்து வருகிறார்.