கடலில் காணாமல் போன மீனவர் பற்றி யாரும் அக்கறை காட்டாததால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சி தலைவர்கள் கிராமத்துக்குள் நுழைய தடை விதித்தும் அனைத்து கட்சி கொடிகளை அகற்றியும் நாகை மாவட்டம் சீர்காழி அருகே மீனவ கிராமத்தினர் தங்கள் ஒட்டுமொத்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கவியரசன் (28) இவர் 10 ஆம் தேதி சக மீனவர்களுடன் பைபர் படகில், கடலில் மீன் பிடித்தபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
தொடுவாய் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து, கவியரசனை தேடி வருகின்றனர். இதுவரை எந்த தகவல்களும் கிடைக்காததால் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கவியரசனை தேடுவதற்கு தமிழக அரசு சார்பில் உதவிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் கவியரசனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களுக்கு உதவ முன்வராத ஆளுங்கட்சியான, அ.தி.மு.க உட்பட தங்கள் கிராமத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகளையும் இறக்கியதுடன் கொடிமர மேடைகளை வெள்ளை துணியால் மூடினர்.
மேலும் அரசு பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடுவாய் கிராமத்துக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். தங்களுக்கு உதவ அரசு முன் வராவிட்டால் தொடர் சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்