சென்னை பர்மா பஜாரில் திருட்டு விசிடிக்கள் விற்கப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதா? என பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உயர்நீதிமன்ற தனிநீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 139 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
இதற்கு எதிரான மேல் முறையீடு நீதிபதிகள் சசிரதன், ஆர்.சுப்பிரமணியன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சில்லரை பூ வியாபாரிகளையும் கடை அமைக்க விடாமல் தடுப்பதாக கூறி, வழக்கறிஞர் பாலு, நீதிபதிகளிடம் முறையிட்டார்.
அப்போது, பூக்கடைகளுடன் சேர்த்து, பூக்கடை காவல் நிலையத்துக்கும் சீல் வைக்கப்பட்டதா என நகைச்சுவையாக கேட்ட நீதிபதிகள், சில்லரை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். பர்மா பஜாரில் திருட்டு சிடிக்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதா எனவும் வினவினர். மேல் முறையீட்டு மனு பிற்பகலில் விசாரிக்கப்பட உள்ளது.