புதுச்சேரி மீன்பிடி துறைமுகம் 21 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:
மத்திய அரசின் நிதியிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் சேமிப்பு மற்றும் நிவாரண நிதி என்ற திட்டத்திற்கான நிதி 2015 – 2016 ஆம் ஆண்டிலிருந்து பெறப்படாமல் இருந்தது. மீன்வளத்துறை அமைச்சர் பல முறை டில்லிக்கு சென்று மீன்வள அமைச்சகத்தை அணுகி நிதியை வழங்க நிர்பந்தப்படுத்தினார். நேற்று மீண்டும் டில்லி சென்று உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து இத்திட்டத்திற்கான நிலுவை தொகை 4 கோடியே நான்கு லட்சம் ரூபாயை பெரும் வகையில் அதற்குரிய கோப்புகளை மீன்வள செயலர் தருண்ஸ்ரீதர் ஒப்புதல் பெற்று மத்திய விவசாயம் மற்றும் மீன்வள அமைச்சரின் ஒப்புதலுக்கு கோப்பு ஏற்பாடு செய்தார். மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மீனவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப் படும். புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய மீன்வளத்துறை அமைச்சக உயரதிகாரிகளை சந்தித்து, புதுச்சேரி துறைமுகத்துவாரத்தின் வாயிலை கற்களை கொட்டி குறுக்கி, மீன்பிடி படகுகள் தடையில்லாமல் செல்லும் பொருட்டு அதற்குண்டான ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயலர் மத்திய கடலோர மீன்பிடி துறைமுக பொறியாளர் பெங்களூரு பூனாவில் உள்ள மத்திய நீர் மற்றும் திறன் ஆராய்ச்சி நிலையம் கொண்ட அக்குழு இம்மாதம் 23 முதல் 26 ம் தேதிக்குள் பார்வையிடவும் அதற்குண்டான நிதி 4 கோடியே 96 லட்சம் ரூபாயை மத்திய அரசிடம் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 21 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில், புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தினை புனரமைத்து புதுப்பொலிவுடன் செயல்படுத்த பூர் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.