சென்னை பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளை நீதிமன்ற உத்தரவுப் படி மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னையில் கோயம்பேடு பூச்சந்தை தொடங்குமுன் பிராட்வேயில் பூக்கடை என்று அழைக்கப்படும் பத்ரியன் தெருவில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பூ வணிகம் நடைபெற்று வந்தது.
கோயம்பேட்டில் பூச்சந்தை தொடங்கப்பட்ட பின் இங்குள்ள கடைகளில் சில்லறை வணிகம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் சில்லறை வணிகக் கடைகளில் பூ மொத்த வணிகம் செய்வதாகவும், இதனால் இந்தக் கடைளை மூட வேண்டும் என்றும் கோரிக் கோயம்பேடு பூ வணிகர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்துச் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் காவல்துறையினரின் துணையுடன் பத்ரியன் தெருவில் உள்ள 130பூக்கடைகளை மூடி சீல் வைத்தனர்.