தினம் தினம் உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்தும் மீன் பிடி தொழிலுக்கு டீசல் மிக முக்கியமான மூலப்பொருளாக உள்ளதால் மத்திய அரசின் அசல் விலைக்கு டீசல் வழங்க கோரியும் இலங்கை கடல் கொள்ளையரிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற கோரியும் 6 மாவட்ட மீனவர்கள் இன்று 8 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம், காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்ட மீனவர்கள் இன்று 8 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 3,000 விசைப்படகுகள் 10,000 பைபர் படகுகள் தொழிலுக்கு செல்லாததால் சுமார் 3 லட்சம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 மாவட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன
தினந்தோறும் பரபரப்பாக இயங்கி கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடக்கும் தொழில் என்பதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்த சிறுவியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், ஐஸ் உற்பத்தியாளர்கள் உள்பட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீன் உணவை எதிர்பார்க்கும் பிற பொது மக்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.