திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், வருகைப் பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் மாணவ, மாணவிகள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். மாணவிகளையும், பெண் போலீஸார் ஓட, ஓட விரட்டி தடியடி நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், சில மாணவர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.