Forums › Communities › Fishermen › கடலின் தேவாமிர்தம்: கடல் பாசிக்கு அருங்காட்சியகம் அமைத்த சாதனை மீனவர்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 5 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
அக்டோபர் 10, 2018 at 2:31 மணி #14100
Inmathi Staff
Moderatorகடலில் கிடைக்கும் தேவாமிர்தம் போன்ற கடல் பாசியின் அற்புத தன்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் பொருட்டு கடல் பாசிக்கென தனியாக ஒரு அருங்காட்சியகம் ஒன்றை தனி ஒரு மீனவர் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் போற்றுதலையும் பெற்றுள்ளார்.
கடலில் கிடைக்கும் கடல் பாசி மருந்தாக, உணவு பொருளாக உட்கொண்டால் மனிதர்களின் பல நோய்களை வராமல் தடுக்கும் ஒளஷதமாக விளங்கி வருவதை பலரும் அறிந்துள்ளனர்.
ஜப்பான், கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் கடல் பாசியை பெருமளவில் உற்பத்தி செய்து தினசரி உணவாக, மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர வாசனை திரவியங்கள், உரங்கள் தயாரிக்க மூலபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தமிழகத்தின் ராமேஸ்வரம், ராமநாதபுரம், குஜராத் மாநிலத்தின் சில பகுதிகள் போன்ற சில இடங்களில் மட்டும் இயற்கையாக விளையும் கடல் பாசியை அறுவடை செய்தும் அவற்றை விற்பனை செய்தும் மீனவ பெண்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
கடந்த 2017 செப்டம்பர் மாதம் இறுதியில் தேசிய மீனவர் பேரவையும், C- Dot என்ற தொண்டு நிறுவனமும் இனைந்து சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் ஆய்வு மையம் (National Institute of Ocean Technology) வளாகத்தில் கடல் பாசி குறித்த கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த தேசிய கருத்தரங்கில் மத்திய மீன்வள அமைச்சக இணை அமைச்சர் திருமதி கிருஷ்ணா ராஜ் , தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆராய்ச்சியாளர்கள், கடல் பாசி உற்பத்தியாளர்கள், கடல் பாசி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கின் மூலம் கடல் பாசியின் முக்கியத்துவம் குறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க முடிந்தது.
கருத்தரங்கு நடைபெற்று அந்த தகவல்களை மத்திய இணை அமைச்சர் திருமதி கிருஷ்ணா ராஜ், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உள்ளிட்ட உயர்மட்டத்துக்கு கொண்டு சென்றதால் கருத்தரங்கு நடைபெற்ற அடுத்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமது “மான்கி பாத்” நிகழ்ச்சியில் கடல் பாசியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கடல் பாசி உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் மீனவர்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று பேசி மீனவர்களை ஊக்குவித்தார்.
அதே போன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர்
திரு. டி. ஜெயக்குமார் அவர்களும் இதற்கான புதிய ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்படுத்தி மத்திய அரசின் நிதி உதவியையும் பெற்று தந்துள்ளார்.
இந்த நிலையில் தனி ஒரு மீனவன் கடல் பாசி விழிப்புணர்வில் மிக பெரிய சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத்.மிக எளிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக உழைத்து தன் சொந்த முயற்சியில் தோணித்துறை பகுதியில் கடல் பாசிக்கு என்று ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார்.
தன் அன்றாட வருமானத்துக்கு உழைத்தது போக மீதி நேரத்தை இந்த காட்சியகத்தை உருவாக்க செலவழித்துள்ளார்.
இந்திய கடல் பகுதிகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 300 வகை கடல் பாசி வகைகளில் 160 வகை பாசி இனங்களை சேகரித்து இந்த காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறார்.
M.s.c, M.phil மாணவர்கள் 485 பேர்களுக்கும் Phd மாணவர்கள் 70 பேர்களுக்கும் அவர்களுடைய ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக சத்தமில்லாமல் மிக பெரிய சாதனை படைத்துள்ளார்.
பாசிகளை பயன்படுத்தியும், அட்டவணைப்படுத்தியும், உயிருடன் வளர்த்தும் பாதுகாத்து வருகிறார்.
அழிந்து வரும் கடல் பாசிகளை பாதுகாக்கும் பொருட்டு
RK Algae Project Centre என்ற நிறுவனத்தை மண்டபம் தோணித்துறை கடற்கரையில் குடிசை ஒன்றில் வைத்து நடத்தி வருகிறார்.
மேலும் அழிந்து வரும் கடல் பாசி இனங்களை தொட்டியில் வளர்த்து அதை கடலில் விட அரசின் உதவி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று ராஜேந்திர பிரசாத் கருதுகின்றார்.
சாதனை மீனவரைப் பற்றி அறிந்தவர்கள், மற்றும் ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகள் அவரை வெடுவாக பாராட்டி வருகின்றனர்.
அவருடைய ஆர்வமிக்க செயலுக்கு மத்திய அரசின் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம். (CMFRI) மற்றும் தமிழக மீன்வளத்துறை ஆதரவும், அங்கீகாரமும் கிடைத்தால் மீனவர் ராஜேந்திர பிரசாத் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்று ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர்
சே. சின்னத்தம்பி ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
மீனவ சகோதரர் ராஜேந்திர பிரசாத் முயற்சிக்கு உரிய வகையில் தேசிய மீனவர் பேரவை உதவிட வாய்ப்புள்ளதாக தேசிய மீனவர் பேரவை (National Fisherfolk Forum) தலைவரும் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. இளங்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.