நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கப்பட்ட நிலையில், கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக இயக்கப்படும் மலை ரயில் சேவை கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்தது.
தற்போது, சீரமைப்பு பணிகள் முடிந்து, மழையும் குறைந்துவிட்டதால், ஏற்கெனவே அறிவித்தபடி, மலை ரயில் இன்று மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதையடுத்து, மலை ரயிலில் பயணிக்க பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால், ஏற்கெனவே இருந்த 15 ரூபாய் பயணச் சீட்டு 75 ரூபாய்க்கும், 30 ரூபாய் பயணச் சீட்டு 130 ரூபாய் என்றும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தை அறிந்து, அதிர்ச்சி அடைந்தனர்.