சென்னை புழல் மத்தியச் சிறையில், கைதி ஒருவரைச் சந்திப்பதற்காக, வழக்கறிஞர் எனக் கூறி போலி அடையாள அட்டையை பயன்படுத்திய சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறைக்கு சென்ற சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவர், தாம் வழக்கறிஞர் என்றும், கைதி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரது அட்டையை வாங்கி பரிசோதித்தபோது, அதில் முக்கியமான எண்கள் அழிந்து இருந்ததுடன், பெயர் உள்ளிட்ட விவரங்களும் சரியாக அச்சிடப்படவில்லை என்பதை சிறைத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பார் கவுன்சில் இணையதளத்தில் அவரது அட்டையில் உள்ள எண்ணை பரிசோதித்தபோது, மோகன்ராஜ் பயன்படுத்தியது போலி அடையாள அட்டை என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மோகன்ராஜ் தற்போதுதான், திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.