இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் பிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 7 நாட்களாக நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களுக்கான மூலப்பொருளான டீசல் விலை உயர்வை கண்டித்தும் டீசலை மீனவர்களுக்கு மத்திய அரசின் வரிகள் ஏதுமின்றி அசல் விலைக்கே வழங்க கோரியும் இலங்கை கடல் கொள்ளையர்களால் சமீப நாட்களாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கடந்த 7 நாட்களாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் விசைப்படகுகளும் 6 ஆயிரம் பைபர் படகுகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட்டுள்ளதால் நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் 3 லட்சம் மீன் பிடி தொழில் சார்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர்.
ஆறு மாவட்ட மீன்பிடி துறைமுகங்களுக்கு, மீன் இறங்கு தளங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கிடைக்கும் அந்நிய செலவாணியிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் குறித்து கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி 6 மாவட்ட மீனவர்கள் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கூடிப்பேசி எடுத்த முடிவின்படி இன்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் படகுகளின் ஆர்.சி புத்தகத்தை மாவட்ட ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அறிவிப்பின் படி ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரளான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மீனவ சமுதாய தலைவர் தாஜுதீன் தெரிவித்தார்.