அட்மிஷனுக்கு பிளஸ் ஒன் மதிப்பெண்கள் ரத்து: அரசாணையை வாபஸ் பெற கோரிக்கை

Forums Communities Education அட்மிஷனுக்கு பிளஸ் ஒன் மதிப்பெண்கள் ரத்து: அரசாணையை வாபஸ் பெற கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13855
  Inmathi Staff
  Moderator

  உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கல்வி அமைப்புகள், கல்விச் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
  இதுகுறித்து பேராசிரியர்கள் பிரபா கல்விமணி, ச.மாடசாமி, சே.கோச்சடை,  தமிழ் வழிக் கல்வி கூட்டியிக்க ஒருஙகிணைப்பாளர் பெ. மணியரசன் உள்பட கல்விச் செயல்பாட்டாளர்கள், தமிழகக் கல்வி நலனில் அக்கறைகொண்ட பல்வேறு அமைப்பினர், ஆசிரியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
  மேல்நிலைக் கல்வி முதலாண்டுப் பொதுத் தேர்வை நடத்திக்கொண்டே அந்த மதிப்பெண்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் அரசின் கொள்கை மாற்றம் நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது. இதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.
  அரசுப் பள்ளிகள் மட்டுமே பிளஸ் ஒன் பாடங்களை நடத்துவதும், தனியார் பள்ளிகள் அதைப் புறக்கணிப்பதுமான நிலையை மீண்டும் உருவாக்கும். இதனால், கல்லூரிக் கல்விக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறும் சமூக அநீதி தொடரும்.
  தொடர்ந்து மூன்றாண்டுகளுக்குப் பொதுத் தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் நேர்கிறது என்கிற பொத்தாம் பொதுவான காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. எளிமையான தேர்வுகள், பாடச்சுமைக் குறைப்பு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகியவையே மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும். மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முறைகளை மன அழுத்தமற்றவையாக மாற்றவேண்டும்
  நாடு தழுவிய அளவிலான போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறாமல் போவதற்கு மேல்நிலை முதலாண்டுப் பாடங்கள் முறையாகப் கற்பிக்கப்படாததும் ஒரு முதன்மைக் காரணம் என்பது கடந்த காலங்களில் தெளிவாகியுள்ளது. அரசின் புதிய முடிவினால் இந்த அவலம் மீண்டும் தொடரும்.
  கடந்த பத்தாண்டுகளில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ஒரு சதவீதத்தினர்கூடச் சேர முடியவில்லை. போட்டி நிறைந்த வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற உயர்கல்விப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலைமையை மாற்ற உடனே வழி காண வேண்டும் என்று அந்த அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This