ஈரான் கடலோர காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் என 6 பேர், துபாயில் தங்கி மீன்பிடித் தொழிலிலில் ஈடுபட்டிருந்ததாக கூறியுள்ளார். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கிஷ் தீவு அருகே, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி, ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாங்களே நேரடியாக தலையிட்டு, அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரை, முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.