மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பயிற்சி அளித்திடும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வழங்கி உள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான http://www.fisheries.tn.gov.in என்ற முகவரியில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை இயக்குனர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக வேலைநாட்களில் நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை துணை இயக்குனர், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை நேரில் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.