வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிகனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையிலும், பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாகவும் வானிலை தொடர்பான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுவடைந்து புயலாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடலிலும் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் 7ஆம் தேதி வாக்கில், மிக அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.