வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு ஏராளமான மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற அக்டோபர் 5,6-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் நிலை உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு நிலையானது, அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்து வடமேற்கு திசை நோக்கி நகரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், கரை திரும்பி வருகின்றனர். அதே நேரத்தில் 100க்கு மேற்பட்ட விசைப்படகுகள் நடுக்கடலில் மீன்பிடித்து வருவதாகவும் அவர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்து கரைக்கு அழைத்து வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.