புதிய தலைமை செயலகம் குறித்த விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டதால், வழக்கை திரும்பப் பெறுவதாக மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் காரணங்களுக்காக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்பட்டதில், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதோடு, முறைகேடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து, அதன் மூலமும் 5 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். ஒரு அரசு கட்டிய சட்டப்பேரவையை மாற்றியமைக்கவும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுவதாக கூறிய நீதிபதி, வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, ஆணையத்தை எதிர்த்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதியளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்தார்.