தமிழகத்தில் தந்தை பெரியார் சிலைகள் மீது குறி வைக்கப்படுவதற்கு, ஹெச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறை செயல்களின் விளைவுதான் எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், திமுக பொறுத்துக் கொண்டிருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுராவில் பாஜக அரசால், லெனின் சிலை அகற்றப்பட்டபோது, தமிழகத்தில் தந்தை பெரியார் சிலைகள் அகற்றப்படும் என ஹெச்.ராஜா கூறியதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அதன் பிறகே நச்சுக் கலாச்சாரம் பரவத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் லட்சியப் புகழைக் காக்க தலையை கொடுத்தேனும், அவரது சிலையை காப்போம் என்றும், அமைதியை குலைக்கும் நோக்குடன் குரோத வால்கள் ஆடினால், கொள்கை வாள்கள் உயரும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.