மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கேள்விகள் எழுப்பியிருந்தார். அதில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஒப்புதல், தொடக்கவிழா தேதி, கட்டிடக் கட்டுமானத்தை டெண்டர் எடுத்துள்ள நிறுவனத்தின் விவரம் உள்பட 8 கேள்விகளை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையும், செலவினங்களுக்கான நிதி ஆணையமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. இதனால், நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான டெண்டர் குறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.