சேலத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு காரணம் எச்.ராஜாவின் பொறுப்பற்ற பேச்சு தான் என திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், “சேலம் ஓமலூர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி என்ற ஊரில் சமூகப் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரியார் சிலை, அம்பேத்கர் சிலைகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுவதற்குக் காரணம் ஆர்எஸ்எஸ் – குறிப்பாக ஹெச்.ராஜா போன்ற காவிகளின் பொறுப்பற்ற தூண்டல் பேச்சுக்களேயாகும்.
தமிழ்நாடு அரசு தேடப்படும் குற்றவாளியான ஹெச்.ராஜா வகையறாக்களை கைது செய்து, குண்டர் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்தால் ஒழிய இந்த சில்லுண்டித் தன சீண்டல் வேலைகள் நிற்காது.
சாதி, மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, அதில் குளிர் காய நினைக்கும் குறுக்கு புத்தியாளர்கள் செயலை தமிழக காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த முன் வருதல் அவசரம், அவசியம். திராவிடர் கழகமோ, விடுதலை சிறுத்தைகளோ, பொறுமை காட்டுவதை பலவீனமாகக் கருதக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஆங்காங்கு கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு அதிகம்; அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்; எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்” என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.