சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது,
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் வழக்கை ஏற்க முடியாது எனவும், ஆனால் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் சி.பி.ஐயின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக நீதிபதிகள் கூறினர்.
அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகளை அவசர கதியில் சிபிஐக்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டது ஏன் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும், அரசின் பதிலை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை அடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.